உத்தரப் பிரதேசம் மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான சிறுமி, இரண்டு நாள்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை, சோஹாகி பார்வா வன விலங்கு பகுதியில் காணாமல் போன சிறுமியை சடலமாக காவல் துறையினர் கண்டெடுத்தனர். முதற்கட்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ரோஹித் சிங் கூறுகையில், " இந்த கொடூர குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மனோஜ் பாஸ்வான் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அந்நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.