மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில், பாலு நாராயண் செளத்ரி என்பவர், தனது குடும்பத்துடன் சோப்ராவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரவு 11 மணியளவில் சின்சோல் கிராமம் வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலு நாராயண் செளத்ரி, அவரது மனைவி உள்ளிட்ட காரில் வந்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் சிகிச்சைக்காக ஜல்கானில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், லாரி ஓட்டுநர் முகுந்த் பங்காலேவை, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 304-ஏ (அலட்சியம் காரணமாக விபத்து ஏற்படுத்துதல்), 279 (அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்) ஆகியவற்றின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் இந்த விபத்தில் பாலு நாராயண் செளத்ரியுடன் உயிரிழந்த மேலும் பத்து நபர்களான மங்லா செளத்ரி, ஆஷ்லேஷா செளத்ரி, ரியா செளத்ரி, சோனாலி செளத்ரி, பிரியங்கா செளத்ரி, சோனாலி மகாஜன், சுமன்பாய் பாட்டீல், சங்கீதா பாட்டீல், சிவம் செளத்ரி, கார் ஓட்டுநர் தன்ராஜ் கோலி என்பது தெரிய வந்தது.
மேலும், இவர்கள் அனைவரும் சின்சோல் மற்றும் மெஹுல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: பள்ளிப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 10 பேர் காயம்