தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த எல்.பி. நகர் காவல் நிலையம் அருகே குழந்தைகளுடன் பேருந்து ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேருந்தின் உள்ளே சிறுவர்கள் இருந்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், சிறுவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
அதில் அவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து, கூலி வேலை செய்ய அழைத்து வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து காவல் துறை ஆணையர் மகேஷ் பகவத் கூறுகையில், "சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் எல்.பி. நகர் காவல் நிலையம் அருகே பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பேருந்திலிருந்த 11 குழந்தைகளும் மீட்கப்பட்டனர்.
குழந்தைகள் அனைவரும் கூலி வேலை செய்ய சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஹைதராபாத்திற்கு கடத்தி வரப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட அனைவரும் மாநில குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றார்.
இதையும் படிங்க: டெல்லி கலவரம் - கார்ட்டூன் மூலம் இதயங்களை வென்ற அமுல்!