சம காலத்தில் நாம் சந்தித்து கொண்டிருக்கும் உலகப் பெருந்தொற்று கோவிட்-19. ஆனால், இதற்கு முன்னதாக பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு பெருந்தொற்று நோய்கள் உலகை ஆட்டுவித்தே சென்றுள்ளன.
அதில் மிக முக்கியமான பெருந்தொற்று ஸ்பானிஷ் ஃப்ளூ. 102 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தத் தொற்றுக்குக் காரணமான ஹெச்1என்1 வைரஸ் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைத் தாக்கியது. அப்போதே இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் ஒருவர், தற்போது கரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டு இதிலிருந்தும் மீண்டு எழுந்திருக்கிறார். இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால் அவருக்கு வயது 106.
இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனை மூத்த மருத்துவர் கூறுகையில், “டெல்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபரான இம்முதியவரை, கடந்த 1918ஆம் ஆண்டு அவரது நான்கு வயதில் ஸ்பானிஷ் ஃப்ளு தாக்கியுள்ளது. அதிலிருந்து மீண்டவரை, தற்போது உலகையே அச்சுறுத்தும் கரோனா தொற்றும் தாக்கியது.
ஆனால், கரோனாவிலிருந்தும் அவர் வெற்றிகரமாக மீண்டுள்ளார். அவருடைய மகனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், மகனை விட அந்த முதியவர் மிக விரைவில் குணமடைந்தது ஆச்சரியமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
”மனித வரலாற்றிலேயே ஸ்பானிஷ் ஃப்ளு தான் அதிதீவிரமான பெருந்தொற்றாக அறியப்படுகிறது. இதற்கு காரணமான ஹெச்1என்1 வைரஸ் 1918 - 1919ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பரவியது” என அமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் முதன்முதலில் ஒரு ராணுவ வீரருக்குத்தான் இந்தத் தொற்று ஏற்பட்டதாகவும், அங்கு மட்டும் சுமார் ஆறு லட்சத்து 75 ஆயிரம் உயிரிழப்புகள் இந்நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்பானிஷ் ஃப்ளுவால் உலகம் முழுவதும் சுமார் 40 மில்லியன் (4 கோடி) மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று முதல் உலகப் போருக்கு சென்று வந்த ராணுவ வீரர்களால் இந்தியாவிற்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.
வெளி நாட்டிலிருந்து கப்பலில் இந்தியா வந்த மக்களுக்கே இந்தத் தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டது. மேலும், ஸ்பானிஷ் ஃப்ளுவால் இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் உலக அளவில் ஐந்தில் ஒரு பங்கு என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு பெருந்தொற்றால் அம்முதியவர் பாதிக்கப்பட்டாரா எனத் தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறிய, அவரை நாள்தோறும் கவனித்து வந்த மருத்துவர் ஒருவர், “அந்தக் காலகட்டங்களில் குறைந்த அளவிலான மருத்துவமனைகளை இருந்ததால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படியாகினும், கரோனாவால் பாதிக்கப்பட்ட அவருடைய மகனை விட அவர் வேகமாக குணமடைந்ததே, இப்போதும் பெரும் வியப்பாக உள்ளது.
இந்த ஒன்றே அவர் ஸ்பானிஷ் ஃப்ளுவிலிருந்தும் மீண்டிருப்பார் என்று நம்ப வைக்கிறது. உலகையே அச்சுறுத்திய, அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இரு உலகப் பெருந்தொற்று நோய்களை அவர் தோற்கடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இக்குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவருக்கும் கரோனா பாதிப்பு இருந்ததாகவும், அவர்களும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கோவிட்-19: இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கியுள்ளது!