கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம், கண்களால் பார்க்கவோ, கைகளால் தொடவோ முடியாத இந்த நணயங்கள் உலகில் எந்த ஒரு அரசின் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாமல் முற்றிலும் கம்யூட்டர் வழியில் இயங்கக் கூடியது. இந்திய ருபாய், அமெரிக்க டாலர் போல இதிலும் பிட்காயின், லைட்காயின், ரிப்பில் என பல வகையான கிரிப்டோ கரன்சிகள் உள்ளன.
எந்த ஒரு அரசுக்கும் கட்டுப்படாமல் இயங்குவதால் பண மோசடி, போதைப்பொருள் வர்த்தகம் என பல்வேறு வகையான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கும் பயன்படுகிறது. மேலும் பலர் பங்குச் சந்தையைப் போல வாங்கி, விற்று வர்த்தகம் செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். இந்தியாவில் வருமான வரியில் இருந்து தப்பிக்கவும் பலர் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்கின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக கடந்தாண்டு இறுதியில் இது போன்ற கிரிப்டோ வர்த்தக சந்தைகளுக்கு தனியார் உள்ளிட்ட வங்கிகளுக்கு வழங்கும் ஒத்துழைப்பையும் சேவைகளையும் நிறுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது. ஆனாலும் வேறு பல வழிகளில் கிரிப்டோ வர்த்தகமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கிரிப்டோ கரன்சியை முற்றிலும் தடை செய்ய வசதியாக டிஜிட்டல் நாணய தடை மற்றும் கட்டுப்பாடு மசோதா நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.