தெலங்கானா மாநிலம் திலெரு என்ற கிராமத்தில் நேற்று பொதுமக்கள் மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டமான 'மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்' கீழ் பணிபுரிந்து கொண்டிருந்தனர். ஆழமாக பள்ளமெடுக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்ட மண் சரிவில் பலர் சிக்கினர். சிலர் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடினர்.
இருப்பினும் மண் சரிவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் அதில் சிக்கிய 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும், அரசு அலுவலர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் 10 பேரின் உடலையும் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு செல்லாததால்தான் உயிரிழப்பு நேரந்ததாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.