ஆந்திர மாநில சட்டப்பேரவையிலிருந்து தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக குளிர்கால அமர்வின் கடைசி நாளான இன்று (டிச.4), தெலுங்கு தேசம் கட்சியின் பத்து எம்எல்ஏக்கள் சபையின் நடவடிக்கைகளை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என். சந்திரபாபு நாயுடு, மீதமிருந்த உறுப்பினர்கள் என அனைவரும் சட்டப்பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.ஜி.என்.ஆர்.ஜி.பி.யின்(மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதம்) கீழ் நிலுவையில் உள்ள இருப்பு நிதி குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி ஒரு நோட்டீஸ் கொடுத்து, உடனடியாக விவாதிக்க முயன்றது. மேலும், ஒரு வருடத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், முக்கியமான எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.பி பிரச்னை குறித்து விவாதிக்க தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தகவல் அமைச்சர் பெர்னி வெங்கடராமையா, எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைத்தார். அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இடைநீக்கம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து சபாநாயகர் தம்மினேனி சீதாராம் கூறுகையில், "நீங்கள் தினமும் சட்டப்பேரவையை சீர்குலைக்கிறீர்கள், உங்களை இடைநீக்கம் செய்வதில் நான் வேதனை அடைகிறேன், ஆனால் எனக்கு வேறு வழியில்லை" என தெரிவித்தார்.