கொல்கத்தா: விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பாரத் ஜடோ யாத்திரையை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை, கேரள, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்தது.
இந்த யாத்திரை கடந்த 28ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்திற்குள் நுழைந்தது. அம்மாநிலத்தில் "சாகர் சே பஹர் தக்" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட யாத்திரையை, மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், சிறிய ஓய்வுக்குப் பிறகு மேற்குவங்கத்தில் பாரத் ஜடோ யாத்திரை இன்று(ஜன.2) மீண்டும் தொடங்கியது. இன்று கொல்கத்தாவிற்குள் நுழைந்த யாத்திரையில், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்த யாத்திரையின்போது, மேற்குவங்கத்தில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் இணைந்து முக்கிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி, மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள குர்சியோங்கில் யாத்திரை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாரத் ஜோடா யாத்ரா... குருத்வாரா சென்ற ராகுல் காந்தி!