மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 'கோவாக்சின்' தடுப்பூசி நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருவதை பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எலா உறுதி செய்துள்ளார்.
மத்திய அரசு பெற்றுள்ள தேவை விவரங்களின் அடிப்படையில், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தனது கரோனா தடுப்பூசியான கோவாக்சினை மாநிலங்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஜம்மு & காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு தற்போது பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், மே 1ஆம் தேதி முதல் அந்நிறுவனம் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு தனது 'கோவாக்சின்' தடுப்பூசியை நேரடியாக விநியோகித்து வருவதை தற்போது உறுதிபடுத்தியுள்ளது.
”மத்திய அரசு பெற்றுள்ள தேவை விவரங்களின் அடிப்படையில் மே 1ஆம் தேதி தொடங்கி மாநில அரசுகளுக்கு கோவாக்சின் நேரடி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களிலிருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன, 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் எங்கள் தடுப்பூசியின் விநியோகம் இருக்கும்" என எலா இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி, மாநிலங்களுக்கான 'கோவாக்சின்' விலையை டோஸுக்கு 400 ரூபாயாகக் குறைப்பதாக பாரத் பயோடெக் அறிவித்தது. அந்நிறுவனம் முன்னதாக டோஸ் ஒன்றுக்கு 150 ரூபாய் வீதம் மத்திய அரசுக்கு விற்ற நிலையில், பாரத் பயோடெக்கின் விலைக் கொள்கை குறித்து பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவாக்சின் விலை என்ன தெரியுமா?