ஹைதராபாத்: கோ- பே (co-pay) என்பது மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் ஒரு வசதி அல்லது நிபந்தனை என்று கூறலாம். இதனை இணை செலுத்தல் என்பார்கள். அதன்படி, மொத்த பிரீமியம் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைக்கிறார்கள். அதேநேரம் மருத்துவ செலவுகளுக்கு கிளைம் செய்யும்போது, அந்த குறிப்பிட்ட தொகையை பாலிசிதாரர் செலுத்த வேண்டும், மீதம் உள்ள தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்தும்.
குமார் என்பவர் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளார். பாலிசி எடுக்கும்போது, பிரீமியத்தின் சுமையைக் குறைப்பதாக நினைத்து 20 சதவீதம் கோ-பேமன்ட்டை தேர்வு செய்துள்ளார். எதிர்பாராத விதமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 8 லட்சம் ரூபாய் பில் வந்தது. அதனை கிளைம் செய்யும்போது, கோ-பே நிபந்தனையால் 1.60 லட்சம் ரூபாயை தனது சொந்த சேமிப்பிலிருந்து செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. காப்பீடு எடுத்தபோதும் இக்கட்டான சூழலில் அவருக்கு நிதிச்சுமை ஏற்பட்டது.
அதற்கு காரணம் கோ-பேவை அவர் தேர்வு செய்ததுதான்.பிரீமியத்தைக் குறைக்க பலரும் இந்த கோ-பே நிபந்தனையுடன் பாலிசிகளை எடுக்கின்றனர். இந்த கோ-பே வசதி தொடக்கத்தில் லாபகரமாக தோன்றினாலும், எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும். பிரீமியம் சற்று அதிகமாக இருந்தாலும், மொத்த கிளைம்களை செலுத்தும் பாலிசிகளை தேர்வு செய்வதுதான் நல்லது. சில காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களை திட்டமிட்டு கோ-பேவில் சிக்க வைக்கிறார்கள். அதனால், பாலிசி எடுக்கும்போது நெட்வொர்க் மருத்துவமனைகள் குறித்தும், கோ-பே குறித்தும் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.தெரியாமல் கோ-பே எடுத்துவிட்டால், அவசரகால சூழ்நிலைகளின் கீழ் சில காப்பீட்டு நிறுவனங்கள், கோ-பே நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதேபோல் பெருநகரங்களில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் அறைவாடகை, ஐசியு கட்டணங்கள் அதிகளவில் இருப்பதால், அதுபோன்ற மருத்துவமனைகள் பெரும்பாலும் கோ-பே நிபந்தனையுடன் செயல்படுகின்றன. அதனால், அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு பாலிசி எடுக்க வேண்டும்.பிரீமியத்தின் சுமையைக் குறைக்க இளம் வயதுடையவர்கள் கோ-பேவை தேர்வு செய்யலாம். ஆனால், நோய்கள் உள்ளவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், கோ-பே மற்றும் பிற துணை நிபந்தனைகள் இல்லாத பாலிசிகளை எடுப்பது நல்லது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: குறுகிய கால அல்லது நீண்ட கால நிலையான வைப்பு(FD): உங்களுக்கு எது சிறந்தது?