மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பொருளாதாரம், மனித வளம், தொழில் வளர்ச்சி உள்பட பல குறியீடுகளில் தமிழ்நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகாலத்தில், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டில் ஊழல் தலை விரித்தாடுவதாக ஒரு புறம் தொடர் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், நாட்டிலேயே நகரமயமாக்கலில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், வாழ்வதற்கு எளிமையான நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, திருப்பூர் உள்பட தமிழ்நாட்டின் பல நகரங்கள் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 5 கோடி நகரங்கள் அடங்கிய அப்பட்டியலில் புனேவை இரண்டாவது இடத்திற்குத் தள்ளி பெங்களூரு முதல் இடத்தைப்பிடித்துள்ளது.
10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் வாழும் 62 நகரங்களில் ஷிம்லா முதலிடமும் புவனேஷ்வர் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கள்தொகை ஒரு கோடிக்கும் மேல் உள்ள நகரங்களில் பட்டியலில் பெங்களூரு முதல் இடத்தையும் சென்னை 5ஆவது இடத்தையும் கோவை 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியல் போல் அல்லாமல், ஒரு கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரம், 10 லட்சத்திற்கும் கீழான மக்கள் தொகை உள்ள நகரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்கத்திலிருந்து ஒரு நகரம் கூட இடம்பிடிக்கவில்லை.
இப்பட்டியலின் தயாரிப்புப் பணிகள், கடந்தாண்டு ஊரடங்குக்கு முன்பே தொடங்கி நிறைவடைந்துவிட்டது. 10 லட்சத்திற்கும் மேலான மக்கள் வாழும் நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அப்பட்டியிலில், டெல்லி 13ஆவது இடத்தையும் காசியாபாத், ஃபரிதாபாத் ஆகிய நகரங்கள் 30 மற்றும் 40ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
வாழ்வதற்கு எளிமையான நகரங்களில் 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள பட்டியலில் சேலம், வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கைத் தரம், நகர வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் தாக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைத் தரம், நகரங்களின் பொருளாதாரத் திறன், நிலையான வளர்ச்சி, இன்னல்களிலிருந்து மீண்டெழுவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில், மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
மாநகராட்சியின் செயல்பாடுகளில் மக்கள் திருப்தி அடைந்ததற்கான பட்டியலில் புவனேஷ்வர் முதலிடம் பிடித்துள்ளது. வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு பிரச்னைகளை கண்டறிந்து, வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றதில் அப்பட்டியல் பெரிய பங்காற்றியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறைந்த விலையில் வீட்டுவசதி, சுத்தமான குடிநீர் எளிதாக கிடைப்பது, அடிப்படைக் கல்வி, மருத்துவ வசதி, பாதுகாப்பு உள்ளிட்டவை வாழ்க்கைத் தரத்திற்கான அம்சங்களாக உள்ளன. இப்பட்டியலின்படி, இந்திய நகரங்கள் சராசரியாக 53.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளன.