புதுச்சேரி: புதுவையில் அதிகபட்சமாக 160 ரூபாய் அளவிற்குத் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் உள்ளது. குறிப்பாக 3d திரைப்படங்கள் வெளியிடப்பட்டால், கூடுதலாக 30 ரூபாய் என்று 190 ரூபாய் டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோன்று ஆன்லைன் என்ற முறையில் சுமார் 200 ரூபாய் அளவுக்கு அதிகபட்சமாக டிக்கெட் விலை இருந்து வந்தது.
இந்த சூழ்நிலையில் முன்னணி நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வருகின்ற 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. அதுபோன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் அந்த முன்னணி நடிகரின் திரைப்படம் வெளியிடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் புதுச்சேரி அரசாங்கம், பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் அன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குத் திரையரங்குகளின் டிக்கெட்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது அதிகபட்சமாக பாக்ஸ் 260 ரூபாய், பால்கனி 250 ரூபாய், முதல் வகுப்பு 200 ரூபாய், இரண்டாம் வகுப்பு 175 ரூபாய், மூன்றாம் வகுப்பு 150 ரூபாய் என்று டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலைப்பாடு வருகின்ற 17ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், மேலும் இந்த ஐந்து நாட்களுக்கு அதிகாலை 4:00 மணி காட்சி மற்றும் காலை 8:00 மணி காட்சியும் கூடுதலாக மொத்தம் ஆறு காட்சிகளும் தினசரி இருக்கும் என புதுச்சேரி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மாநகரப் பகுதிகளில் உள்ள மால்கள், மல்டி ஃபிளெக்ஸ்கள் உள்ளிட்ட 13 திரையரங்குகள் மற்றும் புறநகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முன்னணி திரைப்பட நடிகர் விஜயின் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது ’புதுச்சேரி அரசு இதுவரை பீஸ்ட் படத்திற்கான திரையரங்க கட்டண உயர்வுக்கு அனுமதி அளிக்கவில்லை’ என்று கூறினார்.
இதையும் படிங்க:'திரை தீப்பிடிக்கும்..!' : 'பீஸ்ட் மோடில்' தளபதி விஜய்