பெங்களூரு (கர்நாடகா): பெங்களூரு, ஹனுமந்தநகரில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளராக இருப்பவர் ஹரிசங்கர். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் டேட்டிங் ஆப் ஒன்றில் பெயர் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகி, இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஹரிசங்கர் அந்த பெண்ணுடன் பழகுவதை விரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், அந்தப் பெண் ஹரிசங்கரிடம் பணம் கேட்டுள்ளார். ஹரிசங்கரும் முதலில் ரூ.12 லட்சம் பணம் கொடுத்துள்ளார். பின்னர், அந்தப் பெண் மேலும் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து, ஹரிசங்கர் தங்கள் வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் இருந்து 6 கோடி ரூபாய்க்கு லோன் எடுத்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
ரூ.6 கோடி மோசடி: இதையடுத்து, வங்கி வாடிக்கையாளர் பெயரில் ரூ.6 கோடி பணம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக வங்கி உயர் அலுவலர்களிடம் உள்விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வங்கி மேலாளர் மோசடி செய்தது தெரியவந்தது. கடந்த மே 13ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் மோசடி நடத்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது பெயரில் அண்மையில் வங்கியில் கடன் பெற்றுள்ளார். கடன் பெறுவதற்காக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட வங்கி மேலாளர் ஆவணங்களை திருத்தி மோசடி செய்துள்ளார். வங்கி மேலாளர் ரூ.6 கோடி பணத்தை’ அந்தப் பெண்ணிடம் இழந்துள்ளார்.
இந்தியன் வங்கி மண்டல மேலாளர் டி.எஸ்.மூர்த்தி அளித்தப்புகாரின் பேரில், ஜூன் 17ஆம் தேதி ஹரிசங்கர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஊழியர்கள் இரண்டு பேர் மீது மோசடி மற்றும் குற்றச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில், வங்கி மேலாளர் டேட்டிங் ஆப் மூலம் பெண்ணுடன் பழகி, பணத்தை இழந்ததை ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் கூறினர். இதையடுத்து, கடந்த புதன்கிழமை (ஜூன் 22) ஹரிசங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படிங்க: பேருந்திற்காக காத்திருந்தவரிடம் பணம் பறிப்பு - ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச்சென்ற பெண்ணிற்கு போலீஸ் வலை!