வங்க தேசம்: நடப்பாண்டில் துர்கா பூஜை வருகிற அக்டோபர் 1 முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸாமன் கான் இது குறித்து டாக்காவில் நேற்று (செப்டம்பர் 11) ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ராணுவம், போலீஸ், உளவுத்துறை மற்றும் கோயில் நிர்வாக கமிட்டி அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் வங்கதேச துர்கா பூஜை கொண்டாட்ட கவுன்சில் சார்பில் கலந்து கொண்ட அதன் ஆலோசகர் காஜல் தேப்நாத், ஈடிவி பாரத் செய்திகளுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “புனித தலங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களைத் தடுக்க எப்போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
கமிட்டி உறுப்பினர்கள் சிலர் 24 மணி நேரமும் மண்டபத்தில் இருப்பார்கள். தேவைப்பட்டால் நிர்வாகத்தால் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து மணிமண்டபத்தைக் கண்காணிப்பார்கள். ஒவ்வொரு மண்டபத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
இதனுடன், பூஜை நாட்களில் அனைத்து பூஜை மண்டபங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 21 வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு ஒவ்வொரு பூஜை கமிட்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
அதேநேரம் கைவினை கலைஞர்கள் மற்றும் நாடகக் கலைஞர்கள் பலரும் கரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளுக்குப் பிறகு அதிக அளவிலான வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி - ஹைதராபாத் ஏலத்தில் ஒரு லட்டு சுமார் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை!