டெல்லி: ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து சுதந்திரம் கிடைத்த 75ஆவது ஆண்டை இந்தியா கொண்டாடி வருகிறது. இந்த வேளையில், சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள், முக்கிய ஆளுமைகள் குறித்த சிறப்பு தொகுப்பை நமது ஈடிவி பாரத் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடைசி முகலாய மன்னன் பகதூர் ஷா சஃபார் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வீறு கொண்டெழுந்த கடைசி முகலாய மன்னன் பகதூர் ஷா சஃபார், இந்தியர்கள் மனதில் வீரத்தை விதைத்த மன்னன் ஆவார். முகலாய மன்னர்களில் சுதந்திர வேட்கை கொண்டவர்களில் இவர் முக்கியானவர்.
கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இவர் கலகம் செய்யத் தொடங்கியது, ஆங்கிலேயர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். ஆங்கிலேயர்களிடம் சிக்கிய பகதூர், சிறைச்சாலையில் பல சித்ரவதைகளை அனுபவித்தார்.
பசியால் தவித்த பகதூர், உணவு கேட்டதற்கு, ஆங்கிலேயர்கள் அவரது மகனின் தலையை வெட்டி தட்டில் வைத்து கொடுத்திருக்கிறார்கள். அவரது மகன்களின் பிணங்களை டெல்லி நுழைவு வாயிலில் தொங்கவிட்டிருக்கிறார்கள், அப்போதுதான் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படும் என்று. தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி நுழைவு வாயில், இந்தக் கோர சம்பவத்துக்கு சான்றாக இருக்கிறது.
1775 அக்டோபர் 24ஆம் தேதி பிறந்தவர் பகதூர் ஷா சஃபார். இவரது தந்தை இரண்டாம் அக்பர் ஷா, தாயார் லால்பாய் ஆவர். தந்தையின் இறப்புக்கு பிறகு 1837ஆம் ஆண்டுதான் இவர் அரசரானார். 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் செய்த புரட்சிகர படைக்கு தலைமை தாங்கும்போது இவருக்கு வயது 82.
ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இவரது குணத்தால், முகலாய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1857ஆம் ஆண்டு மீரட்டில் நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் போருக்கு தலைமை தாங்கியது இவர்தான் எனக் கூறப்படுகிறது. இந்தப் போரில் மற்ற இந்திய மாநிலங்களின் உதவியுடன் ஆங்கிலேய அரசு புரட்சியாளர்களை நசுக்கியது. இதிலிருந்து தப்பிச் சென்ற பகதூர் ஷா, ஹுமாயூனின் கல்லறை பகுதியில் தங்கியிருந்தார். ஆங்கிலேய அலுவலர் வில்லியம் ஹட்சன், சதியின் மூலம் பகதூரை கைது செய்தார்.
ஆங்கிலேய அரசு தேசத்துரோக வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளை அவர் மீது பதிவு செய்தது. 40 நாள் வழக்கு விசாரணைக்குப் பிறகு, பகதூரை ரங்கூனுக்கு (ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்த பர்மா) நாடு கடத்த உத்தரவிட்டது.
பகதூரை இந்தியாவில் வைத்திருந்தால், அவர் புரட்சிகர சக்திகளின் மையப் புள்ளியாக மாறிவிடுவார் என அஞ்சியே ஆங்கிலேய அரசு அவரை நாடு கடத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பர்மா சிறையில் இருந்தபோது, பகதூர் தனது உணர்வுகளை வெளிப்படுத்த கவிதையை தேர்ந்தெடுத்தார். ஆனால், ஆங்கிலேய அரசு அவர் எழுதுவதை விரும்பவில்லை; அதற்கான எந்த உதவியையும் செய்யவில்லை.
செங்கற்களைக் கொண்டு சுவற்றில் தனது கவிதைகளை எழுதினார். நாட்டின் மீது தீராத அன்பு கொண்ட பகதூர் ஷா, தன்னை மெஹ்ரவுலியில் உள்ள சஃபார் மஹாலில் புதைக்க வேண்டும் என விருப்பப்பட்டார். ஆனால், அவரது விருப்பம் நிறைவேறவில்லை. 1862 நவம்பர் 7ஆம் தேதி ரங்கூன் சிறையில் அவரது உயிர் பிரிந்தது. அதே பகுதியில் உள்ள கல்லறையில் அவர் புதைக்கப்பட்டார்.
பகதூரின் இறப்பு செய்தி இந்தியாவுக்கு தெரியக்கூடாது என்பதில் ஆங்கிலேய அரசு உறுதியாக இருந்தது. ஒருவேளை அவர் இறப்பு செய்தி இந்தியாவுக்கு தெரியவந்தால், மீண்டும் இங்கு புரட்சி எழும் என்பது ஆங்கிலேயர்களின் அச்சமாக இருந்தது. அதனால் அவரது இறுதிச் சடங்கு ரகசியமாக நடத்தப்பட்டது.
1907ஆம் ஆண்டு பகதூரின் கல்லறை அடையாளம் காணப்பட்டு, அங்கு கல்வெட்டு வைக்கப்பட்டது. ஆனால், 1991ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், உண்மையான கல்லறை அதைவிட்டு 25 அடி தள்ளி இருப்பது தெரியவந்தது. அந்தக் கல்லறை சஃபார் தர்கா என அழைக்கப்படுகிறது; மியான்மரில் உள்ள பகதூர் ஷா அருங்காட்சியகக் குழு இதைப் பராமாரித்து வருகிறது.
இந்தியாவில் இன்றளவும் கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவுக்கு என தனி மரியாதை உண்டு. டெல்லியில் உள்ள சில சாலைகள், பூங்காக்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் லாகூரில் உள்ள ஒரு சாலைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்க தேச அரசு தாகாவில் இருந்த விக்டோரியா பூங்காவை ‘பகதூர் ஷா சஃபார் பூங்கா' எனப் பெயர் மாற்றம் செய்தது.
‘தி லாஸ்ட் முகல்’ புத்தகத்தை எழுதிய வில்லியம் டேல்ரிம்பிளின் வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், சஃபார் ஒரு மறக்க முடியாத மனிதர். கவிஞர், எழுத்தாளர், இந்து - முஸ்லீம் ஒற்றுமையை விரும்பியவர். அவரது மூதாதையர் அக்பர் போல இஸ்லாமிய நாகரிகத்தின் சகிப்புத்தன்மை பன்முகத்தன்மையை காத்த ஒருவராக பகதூர் ஷா எப்போது நினைவுகூரப்படுவார்.
இதையும் படிங்க: பாரவண்டி படுகொலை: 100 ஆண்டு கால ஆறா வடு!