இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை, சாலை விபத்துகளைக் குறைக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இதனை கொண்டாடும் போதே அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றால், சாலைப் பாதுகாப்பு விதிகளையும், விழிப்புணர்வு பரப்புரையையும் எந்தளவுக்கு நாம் மதிக்கிறோம் என்ற வினா எழுகிறது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பறக்கும் வேகத்தையும், கண் முன்பே நடக்கும் விபத்துகளையும் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. கார்களைப் பொறுத்தவரை அமெரிக்கா, ஐரோப்பாவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் வேகம் 130 கி.மீ மட்டுமே. உலகிலேயே கார்களுக்கு அதிகபட்ச வேகத்தை அனுமதிக்கும் நாடு ஐக்கிய அரபு எமிரேட் தான். அங்கு சில சாலைகளில் மட்டும் 160 கி.மீ வேகம் அனுமதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் மணிக்கு 90 கி.மீக்கு கூடுதலான வேகம் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால், தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 150 முதல் 180 கி.மீ வேகத்தில் வாகனங்கள் பறப்பதைப் பார்க்க முடியும். இதைக் கட்டுப்படுத்தாமல் வாகன விபத்துகளைத் தடுக்க முடியாது. இதைத் தடுக்க தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில் வேகத்தை அளவிடும் காமிராக்களைப் பொறுத்தி அதிவேக வாகனங்களைக் கண்டறிந்து, வாகன ஓட்டிகளின் உரிமங்களை ரத்து செய்தல், வாகன உரிமையாளர், வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் ஏதேனும் ஒரிடத்தில் அடிக்கடி விபத்து நடந்தால், அதற்கான காரணத்தை ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் அதிகாரிகள், அக்குறையை உடனடியாகச் சரி செய்கின்றனர். அங்கு ஒவ்வொரு நெடுஞ்சாலைக்கும் விபத்து வரலாறு பதிவேடு பராமரிக்கப்படுகிறது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்த அங்கு இதுவே காரணம். ஆனால், நமது நாட்டில் 'இது விபத்துப் பகுதி' என்று அறிவிப்புப் பலகை வைத்து விட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். உலகில் விலைமதிப்பற்றது மனித உயிர்கள் ஆகும். எனவே, தமிழக நெடுஞ்சாலைகளை விபத்தில்லா சாலைகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பசுவதையை கண்காணிக்க 'பசு பாதுகாப்பு படை' - செண்டலங்காரா செண்பகா மன்னர் ஜீயர் தகவல்