கேரளாவில் வரதட்சணை பிரச்னை காரணமாக விஸ்மயா என்ற பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வரதட்சணைக்கு எதிராக அம்மாநில இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகை விளம்பரங்களில் பெண்கள் மணமகளைப் போல வருவது வரதட்சணையை ஊக்குவிக்கும் என்பதால் இதுபோன்ற விளம்பரங்களை தவிர்க்குமாறு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அறிவுறுத்தியுள்ளார்.
அவற்றுக்கு மாற்றாக இல்லத்தரசிகள், குழந்தைகள் இருப்பது போன்று விளம்பரம் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
கேரள மீன்வளம் மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் முன்னதாக அம்மாநில ஆளுநர் பட்டமளித்த நிலையில், வரதட்சனை வாங்கமாட்டோம் என பட்டப்படிப்பு மாணவர்கள் முன்மொழிந்தனர். தொடர்ந்து அம்மாணவர்களுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவர்களை சேர்க்கும் கல்லூரிகள், அவர்களிடமிருந்து வரதட்சணைக்கு எதிரான படிவங்களை பெறும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 14ஆம் தேதி வரதட்சணைக்கு எதிராக ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உண்ணாவிரதமிருந்தார். வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த விஸ்மயாவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் பிரச்னையை விவாதிக்க அரசு தயாராக இல்லை - டிகேஎஸ் இளங்கோவன் புகார்