இந்தச் சம்பவம் குறித்து கடலோரப் பாதுகாப்புப் படை வீரர் கூறியதாவது:
23 நபர்களுடன் துபாய் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அனஸ்டாசியா 1 டேங்கர் கப்பல் முழு மின்தடையால் கட்டுப்பாட்டை இழந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளை நோக்கி பயணிக்க தொடங்கியது. சுமார் 910 டன் எரிபொருளுடன் இந்த டேங்கர் பாதுகாக்கப்பட்ட காடுகள் நிறைந்த அந்தமான் தீவுகளை நெருங்கியது.
போர்ட் பிளேயரில் உள்ள கடல்சார் மீட்புக்குழுவிடம் இது குறித்து தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கேம்ப் பேவில் இருந்து வானூர்தி மூலம் டேங்கர் கண்காணிக்கப்பட்டது. அத்துடன் அங்கு தொடர்ச்சியாக ரோந்துப் பணியில் ஈடுபடும் "விஷ்வாத்" பாதுகாப்புப் படை கப்பல் அங்கு திருப்பிவிடப்பட்டது.
உடனடியாக பாதுகாப்புப் படையினரின் கப்பல் அனஸ்டாசியா டேங்க்கரை அடைந்தது. பின்னர் பாதுகாப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்தனர்.
பின்னர், பாதுகாப்புப் படையினரின் கப்பல் டேங்கர் கப்பலை டோ (tow) செய்து பத்திரமாக மீட்டது. கடலோரப் பாதுகாப்புப் படையின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக பாதுகாக்கப்பட்ட காடுகளைக் கொண்ட அந்தமான் தீவுகள் பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அத்துடன் டேங்கர் கப்பலில் டன் கணக்கில் கச்சா எண்ணெய் இருந்தபோதும் அது கடலில் சிந்தாமல் பத்திரமாக மீட்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.