பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக பி.எஸ். எடியூரப்பா உள்ளார். இவரது ஆட்சிக்கு எதிராக கடந்த முறையே போன்று தற்போதும் கலக குரல்கள் கேட்டுவருகின்றன.
அண்மையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது வேறு மாநில அரசியலில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. எடியூரப்பா பதவி விலக போகிறார் என்றும் பேச்சுகள் அடிபட்டன.
ஆடியோ சலசலப்பு
இதற்கு சத்தியம் செய்யாத குறையாத இல்லை.. இல்லவே இல்லை.... என்று மறுப்பு தெரிவித்தார் 79 வயதான பி.எஸ். எடியூரப்பா. ஆனாலும் சலசலப்புகள் ஓய்ந்தபாடியில்லை. இதற்கிடையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில ஆடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அந்த ஆடியோவில் தலைமைக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை கூறும் பாஜகவினர் தலைமையை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். இதற்கிடையில் ஆடியோ சொல்லும் சேதியை மறுத்துள்ள மாநில பாஜக தலைவர் நலின் குமார் கட்டீல், “இது யாரோ திட்டமிட்டு செய்த சதி.
இதில் எந்த உண்மையும் இல்லை. இதற்கு பின்னால் உள்ள உண்மையை கண்டறிய வேண்டும். இதில் முதலமைச்சர் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஸ்திரமற்ற ஆட்சி
இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “மாநிலத்தில் பாஜக ஸ்திரமற்ற ஆட்சியை வழங்கிவருகிறது. முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிப்படையாகவே பேச தொடங்கிவிட்டனர். இது எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத நிலைமை. கடந்த 7-8 மாதங்களாக இதுதான் கர்நாடகாவில் நடந்துவருகிறது” என்று வேதனை தெரிவித்தார்.
கடந்த மாதம் பாஜக எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். சுற்றுச்சூழல் அமைச்சர் சி.பி. யோகேஸ்வரா மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி நடைபெறவில்லை, அவரது மகன்தான் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களை கட்டுப்படுத்துகிறார்” என்றார்.
பரபரப்பு
தமிழ்நாட்டில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, கட்சித் தொண்டர்களிடம் பேசிவரும் ஆடியோக்கள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் ஆடியோ அரசியல் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஊரடங்கிற்குப் பின் தொண்டர்களை நிச்சயம் சந்திப்பேன் - சசிகலா!