அமராவதி (ஆந்திரா): தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பட்டாபிராமன் நேற்று (அக்.19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை அவதூறு பேசியதாகக் கூறப்படுகிறது. பட்டாபிராமனின் பேச்சால் ஆவேசமடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர், மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைமை அலுவலகம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அக்கட்சியின் பல்வேறு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதில், ஒரு பிரிவினர் தெலுங்கு தேச கட்சித் தலைமை அலுவலகத்தின் வாயில் கேட்டை உடைத்து, அலுவலகத்தின் புகுந்தனர். அங்கிருந்தவர்களையும், அனைத்து பொருள்களையும் கடுமையாகத் தாக்கும் சிசிடிவி காணொலிகள் வெளியாகியுள்ளது. மேலும், பட்டாபிராமனின் குடியிருப்பும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
ஜெகன்மோகன் பதவி விலகக் கோரிக்கை
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரின் இந்த தாக்குதலுக்கு, முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், இதனால் முதலமைச்சர் ஜெகன்மோகன் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கூறினார். மேலும், இந்த தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் விதமாக ஆந்திரா முழுவதும் இன்று (அக்.20) முழு கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்புவிடுத்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்., மறுப்பு
இதுகுறித்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லாடி விஷ்ணு கூறுகையில், "நடைபெற்ற தாக்குதலுக்கும், எங்களுக்கும் என்ன தொடர்பு?. பொதுமக்களிடம் எங்கள் மீது அவப்பெயரை உண்டாக்க அவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். சந்திரபாபு நாயுடுவின் இதுபோன்ற சதித்திட்டங்கள் குறித்து அனைவருக்கும் தெரியும்" என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அலுவலகங்கள், தலைவர்கள் வீடுகள் ஆகியவற்றில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ராகுல் காந்தி ஒரு போதை அடிமை" கர்நாடக பாஜக தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை