குஜராத்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவனரும், வருவாய் புலனாய்வு இயக்குனரக (DRI) அதிகாரிகளும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த கன்டெய்னர் ஒன்றில், ஹெராயின் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த கன்டெய்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக குஜராத் கடல்பகுதிக்குள் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கன்டெய்னரில் இருந்த 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 250 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
அண்மைக்காலமாக குஜராத் கடற்பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாகவும், வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் போதைப்பொருள்களை கடத்தி வர, குஜராத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு முந்த்ரா துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3 டன் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.