பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பிடித்தபோதும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி நிலைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராக இருந்த நிலையில், ஓராண்டில் பாஜகவின் குதிரை பேர அரசியலால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்தது.
இதனிடையே அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாத வாக்கில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என பாஜக பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. மறுபுறம் ஆம்ஆத்மியும் கர்நாடகாவில் களமிறங்கவுள்ளது. ஆனால், இப்போதும் கர்நாடகாவில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் உள்ளன.
இந்த நிலையில், 2023 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 93 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டார். அதில், ராமநகர் தொகுதியில் நிகில் குமாரசாமியும், சன்னபட்டணா தொகுதியில் குமாரசாமியும் போட்டியிடுகின்றனர். சாமுண்டேஸ்வரி தொகுதியில் ஜி.டி.தேவேகவுடாவும், ஹுனாசுரு தொகுதியில் ஹரிஷ் கவுடாவும் போட்டியிடவுள்ளனர். இந்த பட்டியலில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க:பிசிசி உறுப்பினர்கள் 12 பேர் திடீர் விலகல்.. கேசிஆர் சர்வாதிகாரி என குற்றச்சாட்டு!