திஷ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் தாரங்க் மாவட்டத்திலுள்ள தால்பூர் பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அவர்கள் வாழ்கின்ற இடம் ஆக்கிரமிப்பு பகுதி எனவும், அந்த நிலத்தை மீட்டு உழவுக்கு பயன்படுத்தவும் அம்மாநில அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி கடந்த திங்களன்று தொடங்கி ஒரு பகுதி மீட்கப்பட்டது. மீதமுள்ள பகுதிகளை மீட்க நேற்று அரசு அலுவலர்கள் சென்றபோது, அங்கு குடியிருந்தவர்கள் அரசுக்கு எதிராகவும், காவல்துறையினருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
வெடித்த வன்முறை
இதனால், காவல்துறையினருக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் குடியிருப்புவாசிகள் காவல்துறையினர் மீது கல்லெறியத் தொடங்கினர்.
வன்முறை களமான அப்பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், இருவர் உயிரிழந்தனர்; பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வைரல் வீடியோவின் பின்னணி
இந்த வன்முறைச் சம்பவத்தின்போது, கட்டையால் தாக்க முயன்றவரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கினர். அவர்களோடு சேர்ந்து புகைப்படக் கலைஞர் ஒருவர் அவரை கடுமையாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானாது.
அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ராகுல்காந்தி ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், வைரலான வீடியோவில் குடியிருப்பு வாசியை கொடூரமாக தாக்கும் புகைப்படக் கலைஞர், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணியை ஆவணப்படுத்த தாராங் மாவட்ட நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்ட பிஜய் பனியா என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிஜய் பனியாவை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
நீதி விசாரணை
நாடு முழுவதும் இச்சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதெடார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் இவ்விசாரணை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அகில பாரதிய அகார பரிஷத் மடாதிபதி தற்கொலையில் சந்தேகம்- வழக்கை விசாரிக்கும் சிபிஐ