கெளகாத்தி (அஸ்ஸாம்): ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு அஸ்ஸாமிலிருந்து கொண்டுவரப்பட்ட ஜெயமாலா எனும் யானையைத் திரும்ப அழைத்துச்செல்ல முடியாத நிலையில், கெளகாத்தி உயர் நீதிமன்றத்தில் அஸ்ஸாம் அரசாங்கம் தமிழ்நாட்டிற்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஜெயமாலா யானையைக் கொடுமைப்படுத்தும் காணொலி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், கடந்த செப்.2ஆம் தேதி அன்று ஜெயமாலாவைத் திரும்ப அழைத்து வர அஸ்ஸாம் மாநில வனத்துறை ஓர் குழுவை அனுப்பி வைத்தது. ஒரு ஆதரவற்ற யானையை சரியாக பாதுகாக்கத்தெரியவில்லை என பொதுமக்கள் அஸ்ஸாம் அரசாங்கத்தை விமர்சித்தனர்.
இதனையடுத்து, அம்மாநில வனத்துறை, அதனின் உயர்மட்ட குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பி, ஜெயமாலாவைத் திரும்ப அழைத்து வர முயற்சிகள் எடுத்தது. ஆனால், தமிழ்நாடு அரசாங்கம் அந்த உயர்மட்டக்குழுவை யானையைக் காண அனுமதிக்கவில்லை. அஸ்ஸாம் அரசாங்கம் அங்கீகரிக்கப்படாத முறையில், தன் மாநில அரசு அலுவலர்களை அனுப்பியதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், இன்று(செப்.14) அஸ்ஸாம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை முன்வைத்து அரசிடம் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, தற்போது அம்மாநில அரசாங்கம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஜெயமாலா யானையை மீட்க அஸ்ஸாம் அரசாங்கம் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் தொடரும் தெருநாய்களின் தொல்லை; விபத்தில் இளைஞர் பலி