அஸ்ஸாம்-மிசோரம் எல்லைப் பிரச்சினை காரணமாக மிசோரத்துக்கு வரும் அஸ்ஸாம் வாகனங்கள் சோதனைக்குள்படுத்தப்பட்டு மிகுந்த கெடுபிடிகளுக்கு உள்ளாகின்றன. இதன் காரணமாக அஸ்ஸாமிலிருந்து மிசோரம் வரும் கரோனா பரிசோதனை கிட்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்கள் பராக் பள்ளத்தாக்கு பகுதி வழியாக மாநிலத்துக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளதாக மிசோரம் சுகாதாரத் துறை அமைச்சர் ஆர். லால்தாங்லியானா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனை அஸ்ஸாம் அரசு மறுத்துள்ளது. கரோனா தொற்று வெகுவாகப் பாதித்த மாநிலங்களில் மிசோரமும் ஒன்றாகும். அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து வரும் மருத்துவப் பொருள்கள் அம்மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் தேங்கியுள்ளதாக ஆர். லால்தாங்லியானா குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, அஸ்ஸாம் அரசு நிதியுதவி அளிப்பதில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய, உயிர் காக்கும் பொருள்களைக் கொண்டுவரும் வாகனங்கள் அஸ்ஸாம் மாநிலம் தோலாய்- லைலாபூர் பகுதியில் சிக்கியுள்ளன. போக்குவரத்தை மீண்டும் தொடங்க நாங்கள் ஒன்றிய அரசை அணுகுவோம்" என்றார்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி நடைபெற்ற மிசோரம்-அஸ்ஸாம் ஆயுத மோதலில், ஆறு காவல் அலுவலர்கள் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே மிசோரம் மாநிலத் தலைமைச் செயலர் வால்னுன்மவியா, இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசு மீது நம்பிக்கை இருப்பதாகவும் இது குறித்து உள் துறை அமைச்சகத்துக்கு மீண்டும் கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்தார்.
மிசோரத்துக்கு வரவுள்ள பொருள்களில் 95 விழுக்காடு அத்தியாவசிய பொருள்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினை குறித்து ஒன்றிய அரசுக்கு மிசோரம் அரசு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளது.
இதையும் படிங்க: யமுனா ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பு... 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்!