புதுடெல்லி: குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், அசாம் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, டெல்லியில் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை சார்பில், குழந்தை திருமணம் இல்லாத இந்தியா என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், அறக்கட்டளையின் இயக்குநர் பிடான் சந்திர சிங், மாநில குழந்தை உரிமைகள் மையத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, குழந்தை திருமணத்தை தடுக்கும் வழிமுறைகள் தொடர்பான தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிடான் சந்திர சிங், "குழந்தை திருமணத்துக்கு எதிராக அசாம் மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. இதேபோல் பிற மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். மேற்குவங்கம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், தெலங்கானா, ஒடிசா, அசாம், பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
நாடு முழுவதும் 200 மாவட்டங்களில், 10 கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறுவதை கண்டறிந்துள்ளோம். 18 வயதை பூர்த்தி செய்யாத 23 சதவீத பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த எண்ணிக்கையை 2025ம் ஆண்டுக்குள் 10 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய கைலாஷ் சத்யார்த்தி, "குழந்தை திருமணம் என்பது மனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல். அதை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: "கட்டில் உடைஞ்சு போச்சு" எனக்குமுறிய மணமகன் - திருமணத்தையே நிறுத்திய பெண் வீட்டார்!