அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலத்தின் 'பெண் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ., ஜன்மொனி ரப்பா மீது போலி தங்கம் மோசடி தொடர்பான வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் சாலைவிபத்தில் மரணம் அடைந்துள்ள சம்பவம், அங்கு பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த விவகாரத்தை, சி.பி.சி.ஐ.டி விசாரிக்க, மாநில டிஜிபி ஜி.பி. சிங் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஜன்மொனி ரப்பா, அஸ்ஸாம் மாநிலத்தை சமீபத்தில் உலுக்கிய போலி தங்கம் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட லகிம்பூர் பகுதியைச் சேர்ந்த அஜ்கர் அலியை, ஜன்மொனி ரப்பா தலைமையிலான போலீசார், கைது செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் இருந்து, அஜ்கர் அலியை விடுவிக்க, போலீஸ் எஸ்.ஐ. ஜன்மொனி ரப்பா, பெருந்தொகையை கேட்பதாக, அஜ்கர் அலியின் தாயார் அமினா காதுன், பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஜன்மொனி ரப்பா மீது, நகோன் மற்றும் லகிம்பூர் காவல்துறையினர் கடந்த 15ஆம் தேதி, வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், 16ஆம் தேதி அதிகாலை 02.30 மணியளவில், ஜகலாபந்தா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சருபுகியா கிராமத்தில் இவரது கார் மீது எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் மீது மோதி நிகழ்ந்த விபத்தில், ஜன்மொனி ரப்பா மரணம் அடைந்தார். மாநிலத்தின் காவல் துறை உயர் அதிகாரி மீது வழக்குத் தொடரப்பட்டு இருக்கும் நிலையில், சாலைவிபத்தில் அவர் மரணம் அடைந்துள்ள நிகழ்வு, அங்கு பூதாகரமாக வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, அஸ்ஸாம் மாநில காவல்துறை டிஜிபி., ஜி.பி. சிங், தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ’போலி தங்க மோசடி வழக்கில், ஜன்மொனி ரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில், 15ஆம் தேதி, வடக்கு லக்கிம்பூர் போலீஸ் ஸ்டேசன் சார்பாக, அவர் மீது, 0183/2023 என்ற எண்ணில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, 120 பி, 395, 397, 342, 387 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 16ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்த சாலைவிபத்தில் அவர் மரணம் அடைந்ததாக செய்தி எனக்கும் வந்து உள்ளது. ஜன்மொனி ரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர் சாலைவிபத்தில் மரணம் அடைந்து உள்ள விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
ஜன்மொனியின் மரணம் குறித்து, அவரது தாயார் கூறியதாவது, ’’எனது மகளின் மரணம், திட்டமிட்டு நடந்த சதிச் செயல். சாலைவிபத்தில் மரணம் அடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, நாகோன் போலீஸ் எஸ்.பி. லீனா டோலே தலைமையிலான போலீசார், எங்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டதாகவும், பணம் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்ததாக’’ அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் குற்றச்சாட்டு, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, இந்த விவகாரத்தை, மேலும் பரபரப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. ஜன்மொனி ரப்பாவின் மரணம், இயற்கை மரணம் அல்ல என்று நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜன்மொனி ரப்பா, இதற்குமுன், கணவர் ராணா பனாக் உடன் இணைந்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, சிறைவாசம் அனுபவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சராகிறார் சித்தராமையா - நாளை பதவியேற்பு!