ஆசியாவின் முதல் பெண் டிரக் டிரைவரும் குடியரசுத் தலைவர் விருது பெற்றவருமான பார்வதி ஆர்யா தனது 75ஆவது வயதில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் நேற்று முன் தினம் (நவ.17) உயிரிழந்தார்.
நிதி நெருக்கடியால் ஓட்டுநர் வேலை

சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த பார்வதி ஆர்யாவுக்கு மொத்தம் எட்டு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாகவும், தன் உடன் பிறந்தவர்களை பார்த்துக் கொள்வதற்காகவும் தன் இளம் வயதிலேயே டிரக் இயக்கக் கற்றுக் கொண்டுள்ளார்.
'இந்திராவால் முடியும்; என்னால் முடியாதா?'
அன்றைய காலகட்டத்தில் வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்வதை விட பெண்கள் ஆர்டிஓ அலுவலர்களிடமிருந்து உரிமம் பெறுவது மிகக் கடினமான விஷயமாக இருந்துள்ளது.
அத்தகைய சூழலில், 'இந்திரா காந்தியால் நாட்டை ஆள முடியும் என்றால் என்னால் லாரி ஓட்ட முடியாதா...' என பார்வதி அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அதனையடுத்து 1978ஆம் ஆண்டு, தனது ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றார்.
இதன் மூலம், 'ஆசியாவின் முதல் பெண் டிரக் டிரைவர்' என்ற பெருமையைப் பார்வதி பெற்றார். ஒரு நேர்காணலில், சிறுவயதில் தனக்குப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும், பெண்கள் செய்யும் வேலைகளைக் கண்டு தான் துவண்டு போவதாகவும் பார்வதி கூறியுள்ளார்.
தொடர்ந்து தன் 20ஆம் வயதில் அவர் திருமணம் செய்து கொண்டார்.
காங்கிரஸில் பணி

அரசியலிலும் காலடி எடுத்து வைத்த பார்வதி ஆர்யா, காங்கிரஸில் இணைந்து நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். பல பதவிகளையும் வகித்துள்ளார். 1990ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் சுவஸ்ரா சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பார்வதி, பின்னர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கின்னஸ் சாதனை, கௌரவித்த குடியரசுத் தலைவர்
ஆசியாவின் முதல் பெண் டிரக் ஓட்டுநர் என்ற தனது சாதனையால், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பார்வதி இடம் பெற்றார்.
இந்த சாதனையால் அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்கிடமிருந்து விருதையும் பெற்றார்.
இதையும் படிங்க: Indira Gandhi Birth Anniversary: 'இந்திரா காந்தியின் மிகப் பெரிய பலமே இதுதான்!'