மும்பை : பாலிவுட் பாட்ஷா ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) மும்பை-கோவா கடலில் நட்சத்திர சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தின்போது கைதுசெய்யப்பட்டார்.
அவர் மீது போதைப் பொருள் தடுப்பு அலுவலர்கள் போதை பொருள் நுகர்தல், விற்பனை, வாங்குதல், குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 23 வயதான ஆர்யன் கான், சனிக்கிழமை (அக்.30) நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவரை அவரது தந்தை ஷாருக் கான் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அக்.2ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் அக்.30ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். கிட்டத்தட்ட 28 நாள்கள் அவர் காவலர்கள் பிடியில் இருந்துள்ளார்.
ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் நிபந்தனை பிணை அளித்திருந்தது. அந்த நிபந்தனைகள் குறித்து பார்க்கலாம்.
கூண்டுக்கிளியான ஆர்யன் கான்:
- நடிகை ஜூஹி சாவ்லா வெள்ளிக்கிழமை மாலை ஆர்யன் கானுக்கான ₹1 லட்சம் பத்திரத்தில் கையெழுத்திட சிறப்பு போதைப் தடுப்பு சிறப்பு (NDPS) நீதிமன்றத்தை அடைந்தார். அவர் ஆர்யன் கானுக்கான பிணைப் பத்திரத்தில் ஜாமின் கையெழுத்திட்டார். நடிகை ஜூஹி சாவ்லா, ஷாருக் கான் பல்வேறு படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
- NDPS நீதிமன்றம் ஜூஹி சாவ்லாவின் ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, மீதமுள்ள சட்டவிதிமுறைகளை பின்பற்றியது.
- ஆர்யன் கான் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனால் ஆர்யன் கான், வழக்கு முடியும் வரை அல்லது நீதிமன்றம் அனுமதிக்கும்வரை வெளிநாடு செல்ல முடியாது.
- ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைக்குள் போதைப்பொருள் தடுப்பு (NCB) அலுவலகத்திற்குச் சென்று, நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொள்ள வேண்டும், தேவைப்படும் போதெல்லாம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
- இணை குற்றஞ்சாட்டப்பட்ட அர்பாஸ் (வணிகர்) உடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள வேறு எந்த நபருடனும் தொடர்பு கொள்வோ அல்லது முயற்சிக்கவோ கூடாது.
- NDPS சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆர்யன் கான் எந்தப் பொதுநடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது.
- ஆர்யன் கான், போதைப் பொருள் விவகாரத்தில் பகிரங்க அறிக்கை அல்லது விளக்க செய்திக் குறிப்பை எந்தவொரு ஊடக வடிவிலும் (அச்சு, மின்னணு அல்லது சமூக ஊடகங்கள்) வெளியிட அனுமதி இல்லை.
- இந்த நிபந்தனைகளில் ஏதேனும் மீறப்பட்டால், ஆர்யன் கான் ஜாமீனை ரத்து செய்ய போதைப் பொருள் தடுப்பு அலுவலர்கள் நீதிமன்றத்தை கோரலாம்.
இதையும் படிங்க : ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!