ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு விலக்குக் கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "எங்களுக்கு இந்த வழக்கிலிருந்து விலக்கு வேண்டும். ஏனென்றால் நாங்கள் மருத்துவர்கள்தான், எங்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை. மருத்துவ வல்லுநர்கள் யாராவது இதைப் பற்றி கேட்டால் நாங்கள் சொல்ல முடியும். எனவே எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்" என்று கோரியிருந்தது.
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில், "ஏற்கனவே 115 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. இன்னும் நான்கு சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. தடையை நீக்கினால் ஒரு மாதத்தில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுவிடும்" என்று மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதிட்டார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போது அப்போலோ மருத்துவமனை தாக்கல்செய்த மனுவும் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!