கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனங்களில் ஊழல் செய்யப்பட்டிருப்பதாக மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மீது புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் அமலாக்கத்துறை அலுவர்கள் ஆதாரங்களுடன் சட்டர்ஜியை கடந்த வாரம் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவருக்கு நெருக்கமான பிரமுகர்கள் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளில் ரூ.50 கோடிக்கும் மேல் ரொக்கப்பணமும், கிலோ கணக்கில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டார்.
அந்த வகையில், தொழில், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல், விவகாரங்கள் துறை, பொது நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "திரிணாமுல் காங்கிரஸ் பார்த்தா சட்டர்ஜியை நீக்கம் செய்து உடனடியாக நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த சூழலில் வேறேதும் சொல்ல விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிக்கும் கோடிகள்: அர்பிதா முகர்ஜி வீட்டிலிருந்து மேலும் ரூ.27.9 கோடி பறிமுதல்