குல்காம் : ஜம்மு காஷ்மீர் ஆப்னி கட்சித் தலைவர் குலாம் ஹாசன், குல்காம் பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் வியாழக்கிழமை (ஆக.19) சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று மாலை 6.30 மணிக்கு இந்தப் பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது. குல்காம் தேவ்ஸர் (Devsar) பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே அவர் நின்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குலாம் ஹாசன் சுட்டுக்கொலை
இங்கு கையில் துப்பாக்கியுடன் தயார் நிலையில் இருந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் குலாம் ஹாசனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிக் குண்டுகள் அவரது உடலில் பாய்ந்ததில் அவர் பலத்த காயமுற்றார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். எனினும் அவர் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
சமீபத்தில் குல்காம் மாவட்டத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும். கடந்த வாரம் பாஜக தலைவர் ஒருவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் ஆப்னி கட்சித் தலைவர் குலாம் ஹாசன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குலாம் ஹாசன் படுகொலைக்கு ஆப்னி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்னி கட்சி கண்டனம்
இது குறித்து அக்கட்சித் தலைவர் அல்டாப் அஹமது புஹாரி ட்விட்டரில், “பயங்கரவாதிகளின் செயல் காட்டுமிராண்டிதனமானது. அப்பாவி குலாம் ஹாசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது படுகொலைக்கு கடும் கண்டனங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் கொலைகள் தொடர் கதையாகிவருகின்றன. இங்கு கடந்த 10 நாள்களில் மட்டும் 3 அரசியல் கொலைகள் நடந்துள்ளன. கடந்த 17ஆம் தேதி ஜாவித் அஹமது தார் (பாஜக) குல்காம் மாவட்டத்தில் உள்ள பிராஸ்லோ பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் கொலை
முன்னதாக ஆகஸ்ட் 9ஆம் தேதி ஊராட்சி மன்றத் தலைவர் (பாஜக) குலாம் ரசூல் தார் ரெட்வானி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் பாஜக தலைவர் ஜாஸ்பிர் சிங் ரஜோரி மாவட்டத்தில் குண்டுவீசி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் 6 பேர் காயமுற்றனர்.
இதையும் படிங்க : தொழுகை முடிந்து வீடு திரும்பிய காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை!