மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருள்களுடன் நின்ற வாகனம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
அந்த வாகனத்திலிருந்து ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும், அந்த வாகனத்திலிருந்து மிரட்டல் கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனை, இறந்த நிலையில் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். தற்போது, இவ்வழக்கின் விசாரணையைத் தேசிய புலனாய்வு அமைப்பு கையில் எடுத்துள்ளது.
கார் விவகாரம் தொடர்பாக இறந்த மன்சுக்கின் மனைவியை என்ஐஏ விசாரித்ததில், காரை உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸே நான்கு மாதங்கள் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனை பிப்., 5-ம் தேதி தான் திருப்பி அளித்ததும் தெரியவந்துள்ளது. பின்னர், பிப்.,17இல் அந்த கார் திருடப்பட்ட நிலையில், வெடிபொருள்களுடன் அம்பானியின் வீட்டருகே இருந்துள்ளது. எனவே, இச்சம்பவத்தில் காவல் துறை உதவி ஆய்வாளருக்கு சம்பந்தம் இருக்கலாம் என்ற தகவல் பரவ தொடங்கியது. அவரை கைது செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியது. தொடர்ந்து, அவரை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் பணியிடமாற்றம் செய்தார்.
இதற்கிடையில், சச்சின் வாஸே தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனக் கூறி முன் ஜாமின் தாக்கல் செய்துள்ளார். ஆனால், தானே மாவட்ட நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துது. மேலும், அவர் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், என்ஐஏ அலுவலகத்தில் நேரில் ஆஜரான சச்சின் வாஸேவிடம், என்ஐஏ அலுவலர்களும், மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவும் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 12 நேரம் நீடித்த விசாரணையின் முடிவில், அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரை மார்ச் 25ஆம் தேதி வரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: கழிவறை சுவர்களில் கலைவண்ணம்... வியப்பூட்டிய கர்நாடகா