பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள உஸ்லாபூரில் காதல் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் கொட்டிய கணவன் கைது செய்யப்பட்டார். உஸ்லாபூரில் பவன் தாக்கூர்-சதி சாஹு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் மனைவி சதி சாஹு 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்.
இதுகுறித்து சதி சாஹுவின் பெற்றோர் பவன் தாக்கூரிடம் கேட்டபோது, அவரும் தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளார். இதனிடையே எங்கு தேடியும் பவன் சதி சாஹு கிடைக்காததால், அவரது பெற்றோர் உஸ்லாபூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், பவன் தாக்கூரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: அசாம் போக்சோ கைதுகள் - தமிழ்நாடு அளிக்கும் படிப்பினை என்ன?
முதல்கட்ட விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டின் தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அதை திறந்து பார்த்தபோது உள்ளே பாலிதீன் கவரில் சுற்றியபடி துண்டு துண்டாக பெண்ணின் உடல் இருந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனடிப்படையில் பவன் தாக்கூரிடம் மீண்டும் விசாரிக்கையில் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்காொண்டார். இவர் அளித்த வாக்குமூலத்தின்படி, பவன் தாக்கூர்-சதி சாஹு தம்பதி இருவருக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக பவன் தாக்கூருக்கு சதி சாஹுவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையிலேயே இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 குழந்தைகளையும் பவன் தாக்கூர் அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு மனைவி சதி சாஹு உடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மீண்டும் இருவருக்கும் நடத்தை தொடர்பாக வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஆத்திரமடைந்த பவன் தாக்கூர், சதி சாஹு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அதன்பின் பாலிதீன் கவரில் சுற்றி வைத்துள்ளார். இருப்பினும், உடலை முழுவதும் மறைக்க முடியவில்லை. இதன் காரணமாக உடலை துண்டு துண்டாக வெட்டி அதையும் பாலிதீன் கவரில் சுற்றி வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்துள்ளார். இதையடுத்து, இரண்டு மாதங்களாக சகஜமாக வேலைக்கு சென்று வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சதி சாஹுவின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசாரிடம் சிக்கி உள்ளார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்.. முக்கிய அறிகுறி தொண்டை வலி.. குழந்தைகளை தாக்கும் அபாயம்..