ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிப்.20ஆம் தேதி திங்கட்கிழமை விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து தாக்கியதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்தச் சம்பவம் நடந்த சோகம் மறையும் முன், அதே ஊரில் இன்னொரு சிறுவன் தெருநாய்களால் தாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைதன்யபுரி, மாருதி நகர் சாலை எண் 19-ல், உள்ள ஜெயின் மந்தீரில் திங்கள்கிழமை இரவு மீண்டும் ஒரு 4 வயது சிறுவன் (ரிஷி) தெரு நாய்களால் தாக்கப்பட்டான். அந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் காலனி மக்கள் ஓடி வந்து தெருநாய்களை கற்கள் மற்றும் கட்டைகளால் விரட்டி காப்பாற்றினர்.
நாய்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை பெற்றோர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து பலமுறை ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் புகார் அளித்து தெருநாய்களை துரத்தினாலும், அப்பகுதியில் சிலர் உணவளித்து வருவதாக அந்த குழந்தையின் தாயார் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தெருநாய்கள் கடித்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு - ஹைதராபாத்தில் சோகம்!