சிக்மகளூரு: கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையிலிருந்து திருவனந்தபுரம் புறப்படவிருந்த விமானத்தின் அவசர கதவு திறக்கப்பட்டதாகவும், இதனால் விமானத்தின் புறப்பாடு தாமதமானதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதே விமானத்தில் பாஜக எம்.பியும். இளைஞரணியின் தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா மற்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணித்ததோடு, எமர்ஜன்சி இருக்கை அருகிலே அமர்ந்திருந்தனர்.
இதனிடையே தேஜஸ்வி சூர்யாதான் அவசர வழி கதவை திறந்தார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அண்ணாமலையும் அப்போது உடன் இருந்ததால் அவரும் தொடர்பு படுத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பூடகமான ட்வீட் ஒன்றையும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி டிசம்பர் 29ம் தேதி பதிவிட்டார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதன்முறையாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்திருக்கிறார். கர்நாடகாவின் சிக்மகளூருவில் அரசு நிகழ்ச்சிக்காக சென்றுள்ள அண்ணாமலையை சந்தித்த செய்தியாளர்கள் விமானத்தின் அவசர கதவு திறக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர் சம்பவம் நடந்ததாக கூறப்படும் டிசம்பர் 10ம் தேதி தானும், எம்.பி. தேஜஸ்வி சூர்யாவும் விமானத்தில் இருந்தோம் என கூறினார். அந்த விமானம் ATR72 ரக சிறிய விமானம் என்றும், அதன் எமர்ஜன்சி இருக்கை அருகே தேஜஸ்வி சூர்யா அமர்ந்திருந்தார் என அண்ணாமலை கூறினார்.
தேஜஸ்வியின் இருக்கையில் கை வைப்பதற்கான அமைப்பு (Handrest) சரியாக இல்லை என கூறிய அவர், இதனால் எமர்ஜன்சி கதவை தேஜஸ்வி பிடித்திருந்தார் என குறிப்பிட்டார். விமானத்தில் பயணிகள் முழுமையாக ஏறியிருக்காத அந்த நேரத்தில் தாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம் என அண்ணாமலை கூறினார். அப்போது கதவுக்கும், விமானத்திற்கும் இடையே இடைவெளி இருப்பதை கவனித்த தேஜஸ்வி தன்னிடம் அதனை கூறியதாகவும், இருவரும் உடனடியாக விமான பணிப்பெண்களை எச்சரித்ததாக கூறினார்.
இதனையடுத்து விமான பணிப்பெண், பைலட்டை அழைத்து இது குறித்து விவரித்ததாகவும், விமான விதிகளின்படி பயணிகள் இறக்கிவிடப்பட்டு, பிரச்சனையை சரி செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டதாகவும் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது போன்ற பிரச்சனைகளின் போது எழுத்துபூர்வமான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்பதால் தேஜஸ்வி இது குறித்து எழுதி விளக்கம் அளித்தாகவும் அண்ணாமலை கூறினார்.
தேஜஸ்வி சூர்யா கதவை இழுக்கவில்லை என்பதை அழுத்தமாக குறிப்பிட்ட அண்ணாமலை, படித்தவரான தேஜஸ்வி, பலமுறை விமான பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற நிலையில், எதற்காக அவர் அவசர கதவை பிடித்து இழுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். விமான கதவை திறந்ததற்காக மன்னிப்பு கடிதம் எழுதினார் என்ற தகவலை மறுத்த அவர், தவறு தன்மீது இல்லாவிட்டாலும் சக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என விளக்கம் அளித்தார்.
கதவை பிடித்திருந்த போது கதவு திறந்துவிட்டது என்பது தான் உண்மை, இதனை தேஜஸ்வி தனது அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார் என கூறிய அண்ணாமலை, எதிர்க்கட்சிகள் இதனை மலிவான அரசியலுக்காக ஊதிப்பெரிதாக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.