ரிஷிகேஷ்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பவுரி மாவட்டத்தில், பாஜக மூத்த தலைவரான வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா, விடுதி ஒன்றை நடத்தி வந்தார். அதில், அங்கிதா என்ற 19 வயது இளம்பெண் வரவேற்பாளராக பணிபுரிந்தார். கடந்த 19ஆம் தேதி வேலைக்கு சென்ற அங்கிதா வீடு திரும்பவில்லை. அங்கிதாவை தேடிய பெற்றோர், பிறகு போலீசில் புகார் அளித்தனர். அதேநேரம் அங்கிதா காணாமல் போனதாக விடுதி உரிமையாளர் புல்கித் ஆர்யாவும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே அங்கிதாவின் உடல் கால்வாயில் மீட்கப்பட்டது. அங்கிதா கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் புல்கித் ஆர்யாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. அங்கிதாவை தன்னுடன் உடலுறவு கொள்ளவும், பாலியல் தொழிலில் ஈடுபடவும் புல்கித் ஆர்யா வற்புறுத்தியதாகவும், அதற்கு ஒத்துழைக்காததால் அவரை கால்வாயில் தள்ளி கொலை செய்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கிதாவின் கொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதிக்கு தீ வைத்தனர். இந்த செய்தி சமூக வலைதளங்களிலும் வைரலானது. பாஜக மூத்த தலைவரின் மகன் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டது. அதன்படி நேற்று(செப்.23) புல்கித் ஆர்யா மற்றும் அவரது விடுதி ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட புல்கித் ஆர்யாவின் விடுதியை நேற்றிரவு மாவட்ட அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
இந்த நிலையில், இன்று(செப்.24) காலை கால்வாய் ஒன்றில் இருந்து அங்கிதாவின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.