ரிஷிகேஷ்: உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி மாவட்டத்தில் விடுதியில் வரவேற்பாளராக பணிபுரிந்த 19 வயது இளம்பெண் அங்கிதா சந்தேகத்திற்குரிய முறையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், விடுதியின் உரிமையாளரும், பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனுமான புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டார்.
விடுதியில் பணிபுரிந்த இரண்டு ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். புல்கித் ஆர்யா இளம்பெண்ணை கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து நேற்று(செப்.24) அங்கிதாவின் உடல் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்த இளம்பெண் அங்கிதாவின் முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அங்கிதா நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாகவும், அதேநேரம் இறப்பதற்கு முன்பே அங்கிதாவின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் முழு உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கையில் திருப்தி இல்லை என்றும், இறுதி அறிக்கை வரும்வரை அங்கிதாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய மாட்டோம் என்றும் அங்கிதாவின் தந்தை வீரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அங்கிதாவின் சகோதரர் அஜய் சிங் கூறுகையில், "இந்த முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கையை ஏற்க முடியாது. சம்மந்தப்பட்ட விடுதி இடிக்கப்பட்டது தடயங்களை அழிப்பதற்கான முயற்சி என்ற சந்தேகம் உள்ளது" என்று தெரிவித்தார்.