அமராவதி : ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த நிலையில் தலைநகர் ஹைதராபாத் தெலங்கானா வசம் சென்றது. இதனால் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமராவதி என்ற பிரமாண்ட நகரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்கிடையில் அவர் ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில் அங்கு ஆட்சியை கைப்பற்றிய ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தின் தலைநகரை நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 3ஆக (Three Capitals) பிரிக்கப்போவதாக அறிவித்தார்.
3 தலைநகர் திட்டம்
அதன்படி ஜெகன் மோகன் ரெட்டி 2019இல் ஆந்திராவின் தலைநகர்களாக விசாகப்பட்டினம் (நிர்வாகம்), அமராவதி (சட்டப்பேரவை) மற்றும் கர்னூல் (நீதித் துறை) என மூன்றாக பிரித்து (Three Capitals) அறிவித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் இந்தச் சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இன்று (நவ.22) இந்த வழக்கு விசாரணையின் போது, ஆந்திராவின் தலைமை அரசு வழக்குரைஞர் சுப்பிரமணியம் ஸ்ரீராம் (Advocate General S Subramaniam), உயர் நீதிமன்றத்தில், "மூன்று தலைநகர் சட்டத்தை மாநில அரசு திரும்ப பெற முடிவெடுத்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டப்பேரவையில் அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்.
வாபஸ்
இதையடுத்து மூன்று தலைநகர் திட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜெகன் மோகன் ரெட்டி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது விவசாயிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியான் திவான், “ஆந்திராவின் தலைநகராக அமராவதி நகர் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கனவு. இதற்காக 33 ஆயிரம் விவசாய குடும்பங்கள் தங்களின் நிலங்களை மாநில அரசுக்கு வழங்கியுள்ளன. மேலும், அரசியலமைப்பு சட்டத்தின்படி புதிய தலைநகர் உருவாக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்று வாதாடினார்.
திட்டம் உருவான சட்டம்
ஆந்திராவில் அதிகாரப் பரவல் மற்றும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சம வளர்ச்சி சட்டத்தின் (2020) கீழ் 3 தலைநகர்கள் திட்டம் அறிவிக்கப்பட்டன.
இந்தத் திட்டத்தை தற்போது வாபஸ் பெறுவதாக ஜெகன் மோகன் ரெட்டி திங்கள்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “தனது அரசாங்கம் விரிவான மற்றும் மிகச்சிறந்த அதிகாரப் பரவல் மசோதாவை கொண்டுவரும். 3 தலைநகர் திட்டம் வாபஸ் பெறுகிறது” என்றார்.
இதையும் படிங்க : லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன்: நான் அதிகம் பேசமாட்டேன், செயல் தான் என்னுடைய பணி - முதலமைச்சர்