அமராவதி : ஆந்திராவின் நெல்லூர், பிரகாசம், சித்தூர் மற்றும் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1,000 அவசரகால நிவாரணமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
முன்னதாக மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரகாசம், நெல்லூர், சித்தூர் மற்றும் கடப்பா உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது மழை வெள்ளத்தால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் மீட்புப் பணிகள் குறித்தும் கேள்வியெழுப்பினார்.
இதற்கு மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முகாம்கள் குறித்து பதிலளித்தனர். இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து செய்தி அறிக்கை ஒன்று வெளியானது.
அதில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : '2020 ஊரடங்கில் மாநில அரசுக்கு ரூ.20,000 கோடியும், மக்களுக்கு ரூ.80,000 கோடியும் இழப்பு!'