புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவமணி, கடந்த 22ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் திருநள்ளாறிலுள்ள தேவமணி குடும்பத்தினரை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாமக காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி அடிமட்ட தொண்டனாக உழைத்தவர். தேவமணி அனைத்து மக்களுக்காகவும் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றவர். அவரது கொலையில் மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது.
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்
தேவமணி கொலை வழக்கில் பெயரளவில் நான்கு நபர்களை மட்டும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முக்கியமான குற்றவாளிகள் வெளியில் உள்ளனர். இவருடைய கொலையில் காவலர்கள் சிலர் பின்னணியில் இருக்கிறார்கள் என்று தகவல் வந்துள்ளது. காவல் துறை உண்மையான விசாரணையை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிக்கை
புதுச்சேரி மாநிலத்தில் கூலிக்குக் கொலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது, இதனை ஒழிக்க வேண்டும். தேவமணி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் பாமக சார்பாக தொடர் போராட்டம் நடத்தப்படும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளருமான தன்ராஜ் தலைமையில் குழு அமைத்து, புதுவை ஆளுநர், முதலமைச்சரை சந்தித்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தவுள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாமக பிரமுகர் கொலை வழக்கு - தேடப்பட்டுவந்த நான்கு குற்றவாளிகள் கைது