டெல்லி: அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசியின் கார் மீது உத்தரப் பிரதேச்தில் உள்ள மீரட் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை தொடர்பாக மீரட் நகருக்கு வந்தபோது, இச்சம்பவம் நடந்தேறியது. இதன்பின்னர், அவருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முன்வந்த நிலையில், அதை ஓவைசி நிராகரித்தார்.
கார் பஞ்சர்
இந்தச் சம்பவம் தொடர்பாக ஓவைசி கூறும்போது, "நான் பரப்புரை மேற்கொள்ள மீரட் நகரில் உள்ள கிதாவ் பகுதியில் சாலை மார்க்கமாக சென்றுகொண்டிருந்தேன். அப்போது, எனது காரை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தத் தாக்குதலில் இருந்து எனது கார் தப்பியது. அங்கு இரண்டு பேரை பார்த்தேன். ஒருவர் சிவப்பு நிற ஹூடியும் (Hoodie), மற்றொருவர் வெள்ளை நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். இதன்பின்னர், இரண்டு - மூன்று கிலோமீட்டர் தூரத்தில் எனது கார் பஞ்சரானது. இதனால், வேறு காருக்கு மாறினேன்.
திட்டமிட்ட தாக்குதல்
இந்தத் தாக்குதலுக்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசே பொறுப்பு. அதேநேரம், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். இது குறித்து நான் மக்களவையில் விவாதிப்பேன். ஒரு எம்.பி., மீதான தாக்குதல் என்பது சாதாரணமானது அல்ல.
இது, நன்கு திட்டமிடப்பட்டு என் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். ஏனென்றால், இந்தத் தாக்குதல் சுங்கச்சாவடிக்கு அருகில் நடந்துள்ளது. அவர்கள் என்னை உளவு பார்த்திருப்பார்கள், என் மீதான தாக்குதல் என்பது இது முதல் முறை அல்ல.
தேர்தல் ஆணையம் இதன்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாக இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாலையில் உரை
இந்நிலையில், ஓவைசி மீது நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி, இன்று மதியம் 1 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அமித் ஷா மாலை 4 மணியளவில் உரையாற்றுவார் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.