டெல்லி: நாகாலாந்தின் மான்(Mon) மாவட்டத்தின் ஓட்டிங் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சுடுதலில் 13 நாகா பழங்குடியின இளைஞர்கள் உள்பட ஏறத்தாழ 16 பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயமடைந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அவர்கள் தேசிய சோஸியலில்ட் நாகலாந்து கவுன்சில் (NSCN) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எதிர் தாக்குதலாக, பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு கிராம மக்கள் தீவைத்தனர்.
சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு
இந்த தாக்குதல் சம்பவத்தை நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் துரதிஷ்டவசமான சம்பவம் எனக் குறிப்பிட்டு தங்களின் வருத்தத்தை தெரிவித்திருந்தனர். தாக்குதல் குறித்து விசாரிக்க உயர்மட்ட சிறப்பு விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அமளி
இந்த தாக்குதலுக்கு பிறகு மான் கிராமத்தைச் சுற்றிய பகுதிகளில் இணைய வசதிகள், குறுஞ்செய்தி வசதிகள் போன்றவை உடனடியாக நேற்றிலிருந்து முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகாலாந்து துப்பாக்கிச்சுடுதல் சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (டிசம்பர் 6) அறிக்கை தாக்கல் செய்கிறார்.
மேலும், நாடாளுமன்றம் இன்று காலை தொடங்கியதில் இருந்தே எதிர்கட்சிகளால் இப்பிரச்சனை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதனால், மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இத்தாக்குதல் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்ததை அடுத்து, அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் இந்துக்கள் விரைவில் சிறுபான்மையினராக மாறுவர் - தொகாடியா கவலை