சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி அங்கு அரசியல் கட்சித் தலைவர்களால் பரப்புரை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன்படி பஞ்சாபை தன்வசப்படுத்த, ஆம் ஆத்மி கட்சியினர் மின்சாரம், நீர், கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதிகளைச் சொல்லி பரப்புரை மேற்கொண்டுள்ளனர்.
அந்தவகையில், இன்று (பிப்ரவரி 13) பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து லூதியானாவில் அமித் ஷா பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் விவகாரம் குறித்து பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியைக் கடுமையாகச் சாடினார்.
உழவர்களின் கடன் தள்ளுபடி
மேலும் அமித் ஷா பேசுகையில், "சன்னி அவர்களே பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் அரசை அமைக்க கனவுகண்டு கொண்டிருக்கிறீர்கள். ஒரு முதலமைச்சரால் நாட்டின் பிரதமருக்கே பயண பாதுகாப்பு வழங்க முடியவில்லை, இவரா பஞ்சாபுக்குப் பாதுகாப்பு அளிக்கப் போகிறார்?" என வினா எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், "பஞ்சாபியர்களின் கடின உழைப்பையும், துணிச்சலையும் பார்த்து நான் எப்போதும் பெருமிதம் கொள்வேன். பஞ்சாப் மக்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடவில்லை என்றால், இன்றும் இந்தியா அடிமைப்பட்டு கிடந்திருக்கும்.
பஞ்சாப் இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பஞ்சாப் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லாத வகையில் பஞ்சாபில் பெரிய நிறுவனங்கள் உருவாக்கப்படும். 2022இல் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க பஞ்சாப் மக்கள் தேர்வுசெய்தால், அனைத்து உழவர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்வோம்.
போதைப்பொருள் இல்லா பஞ்சாப்
பஞ்சாபில் எங்கள் அரசு வந்தால், ஐந்தாண்டுகளில் பஞ்சாபை போதைப் பொருள் இல்லா மாநிலமாக மாற்றுவோம்" என்றார். 117 உறுப்பினர்கள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்குப் பொதுத் தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கையும் முடிவுகளும் மார்ச் 10இல் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: 'உண்மை என்னவென்று தெரியாமல் இப்படிப் பேசிட்டீங்களே ஸ்டாலின்!'