டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் உள்ள மைதேயி என்ற இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக் கூடாது என கடந்த மே 3ஆம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஏனென்றால், மலைப் பிரதேச மாவட்டங்களில் வசிக்கும் குக்கி, நாகா பழங்குடியின மக்களுக்கும், இம்பாலைச் சுற்றி உள்ள இந்த மைதேயி இன மக்கள் இந்த அந்தஸ்து வழங்குவதை கடுமையாக எதிர்க்கின்றனர்.
இதனால் மலைவாழ் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து, தொடர்ந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
அது மட்டுமல்லாது, இந்த கலவரத்தால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இரவு பகலாக பாதுகாப்பு பணியிலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த தொடர் வன்முறை சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும், பாஜக ஆளும் மாநிலத்தில் ஒரு இனக் கலவரம் ஏற்பட்டு வன்முறையாக வெடித்து, அதில் ஏராளமானோர் உயிரிழந்து, உடமைகளை இழந்து உள்ள நிலையில், பிரதமர் மெளனம் காப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இம்பாலில் வைத்து அம்மாநில முதலமைச்சர் பிரென் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். மேலும், தங்களது சொந்த மண்ணில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என உள்ளூர் மக்களும் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளின் முன்னால் வைத்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 24) டெல்லியில் வைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கடந்த ஜூன் 21ஆம் தேதி ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பு பதிவில், “மணிப்பூரில் நிகழும் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஜூன் 24 அன்று மாலை 3 மணியளவில் டெல்லியில் வைத்து அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம்.. நடவடிக்கை என்ன? பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்!