கங்காபூர் நகரம் (ராஜஸ்தான்): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘ரெட் டைரி’ சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சர் அசோக் கெலாட் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு செய்த ஊழலுக்கான ஆதாரங்கள் 'ரெட் டைரி'-யில் (Red Diary) உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த ரெட் டைரியைக் கண்டு பயப்படுவதாகவும் ஆகவே, அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கங்காபூர் நகரில் இன்று (ஆக.26) நடந்த 'சஹார் கிசான் சம்மேளனம்' கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரெட் டைரியை கண்டு முதலமைச்சர் அசோக் கெலாட் ஏன் பயப்படுகிறார்? என்று கேள்வியெழுப்பினார். அதோடு, ரெட் டைரிக்குள் கோடிக்கணக்கான ஊழல்கள் தொடர்பான தகவல்கள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் அசோக் கெலாட்டின் "சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள்" பற்றிய விவரங்களின் சிலவற்றை பாஜகவினர் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிட்டு இருந்தனர். அது தவிர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அரசின் ஊழல் நடவடிக்கைகள் மற்றும் தவறுகள் உள்ளிட்டவை அடங்கிய 3 பக்க பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், இது போன்ற பல ரகசியங்களை வரும் நாட்களில் பிரதமர் வெளிப்படுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான பட்ஜெட்டை பாஜக அரசு 6 மடங்கு உயர்த்தியதோடு, கூட்டுறவு அமைச்சகத்தை அமைத்ததாகவும், ஆனால் ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அவரின் சிறப்பு பணிகள் அதிகாரி சௌபாக் சிங் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் தர்மேந்திர ரத்தோர் ஆகியோர் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் (ஆர்சிஏ) கணக்குகளைத் தீர்ப்பது குறித்த உரையாடல்கள் தங்களது வசம் இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக தலைவர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில், “இந்த ரெட் டைரியில் முதலமைச்சரின் மகன் செய்த ஊழல்கள் பட்டியலும் இடம் பெற்றுள்ளது. 2ஜி ஊழல் வழக்கில் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையும், நீதிமன்றத்தின் கண்காணிப்பும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அசோக் கெலாட் தலைமையிலான அரசு மீது இன்று ராஜேந்திர குதாவும் இதே குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: Posing as pilot to Impress Girlfriends: பெண்களை கவர விமானி வேடம் - பெண் நண்பர்களுக்கு போலி விமானி என செய்தி அனுப்பிய போலீஸ்!