நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், இரண்டாம் அலை தொடங்கியுள்ளதா என அச்சம் கொள்ளப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக, அங்கு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஊரடங்கு விதிப்பதற்கு வாய்ப்பில்லை என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஊரடங்கு விதிப்பதற்கு வாய்ப்பே இல்லை. கரோனா பாதிக்கப்பட்டு 14 நாள்களில் மீண்டுவிடுவார்கள் என முதலில் கூறப்பட்டது.
அனைத்து விதமான செயல்பாடுகளையும் 21 நாள்கள் முடக்கினால், கரோனா பரவாது என நிபுணர்கள் கூறினார்கள். அதனால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், பரவல் நின்றபாடில்லை. எனவே, ஊரடங்கு தீர்வாக இருக்காது என நான் நம்புகிறேன்
கடந்த சில வாரங்களாகவே, டெல்லியில் கரோனா எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இன்று மட்டும், 62,000க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.