இதுதொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, "கரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதன் காரணமாக, ஆம்புலன்ஸ் மற்றும் இறுதி ஊர்வல வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி ஆம்புலன்ஸ் மற்றும் இறுதி ஊர்வல வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதைத் தொடர்ந்து இந்த வாகனங்களுக்கான நியாயமான கட்டணத்தை போக்குவரத்துத் துறை நிர்ணயம் செய்துள்ளது. மாருதி, ஆம்னி போன்ற சிறிய வகை ஆம்புலன்ஸ் மற்றும் இறுதி ஊர்வல வாகனங்களுக்கு கட்டணமாக முதல் 10 கி.மீ. வரை ரூ.500, பத்து முதல் 50 கி.மீ. வரை உள்ள தூரத்துக்குக் கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.20, ஐம்பது கி.மீ.,க்கு மேல் உள்ள தூரத்துக்குக் கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
நடுத்தரமான டாடா ஸ்பாசியோ, டாடா சுமோ, மடாடர் போன்ற ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ. வரை ரூ.600, பத்து முதல் 50 கி.மீ. வரை கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.24, ஐம்பது கி.மீ.க்கு மேல் கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.13 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு வாகனங்களுக்கும் கண்டனம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய கட்டணத்தைத் தவிர்த்து, அதிகப்படியான கட்டணத்தை ஆம்புலன்ஸ் மற்றும் இறுதி ஊர்வல வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வசூலித்தால் மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.