ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில், அமர்நாத் வருடாந்திர 62 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள நேரம் நெருங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து காஷ்மீரின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் மோசமான வானிலை காரணமாகவும் அமர்நாத்தின் யாத்திரை இன்று (ஜூலை 7) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, ஜூலை 1ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில், 62 நாள்கள் அமர்நாத் யாத்திரைக்காக, பால்டால் மற்றும் நுன்வான் பகுதிகளைச் சார்ந்த பக்தர்களுடன் முறைப்படி கொடியேற்றப்பட்டது. பால்டால் அடிவாரப் பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 4,445 பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பால்டால் மற்றும் பஹல்காம் வழித்தடங்களில் யாத்திரை நிறுத்தப்பட்டது. "யாத்திரை இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் இன்று காலை புனித குகை சந்நிதியை நோக்கி எந்த பயணிகளும் செல்ல அனுமதிக்கப்படவில்லை" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராம்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோஹிதா சர்மா கூறுகையில்; ''சந்தர்கோட் பகுதியில் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பஹல்காம் பெல்ட்டில்லாவில் மோசமான வானிலை நிலவுவதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது'' என்று பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவிடம் கூறினார்.
மேலும், இன்று (ஜூலை 7) அதிகாலையில் காஷ்மீரின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் பால்டால் மற்றும் நுன்வான் அடிவாரப் பகுதிகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜம்முவில் உள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, ''பஹல்காம் அடிப்படை முகாமுக்குச் செல்லும் 4,600 பயணிகள் சந்தர்கோட்டில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2,410 பக்தர்கள் பால்டால் முகாமுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். வானிலை சீரடைந்தவுடன் யாத்திரை மீண்டும் தொடங்கும்'' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் நேற்று 17,202 பயணிகள் புனித குகை சந்நிதியில் தரிசனம் செய்தனர் எனவும்; தெற்கு காஷ்மீர் இமயமலையில் இயற்கையான பனி லிங்கத்தை இதுவரை தரிசனம் செய்த பக்தர்களின் மொத்த எண்ணிக்கை 84,768 ஆகும்.
தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள 3,888 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலுக்கு 62 நாள் வருடாந்திர யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரட்டைப் பாதைகளில் இருந்து ஜூலை 1ல் தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி யாத்திரை முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:V Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு: ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!