பாட்னா: கௌகாத்தியில் இருந்து ஜம்மு தாவி செல்லும் அமர்நாத் விரைவு ரயில் தவறான வழித்தடத்தில் சென்று, வேறு ஊருக்கு சென்ற சம்பவம் பீகாரில் நேற்று (ஆக. 5) நடந்தேறியுள்ளது.
பிகாரின் பரௌனி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட 15653 என்ற எண் கொண்ட அமர்நாத் விரைவு ரயில், சமஸ்திப்பூர் ரயில் நிலையத்திற்கு வராமல் வித்யாபதிநகர் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. அப்போதுதான், ரயில் ஓட்டுநர்களுக்கும், பணியாளர்களுக்கும் வழித்தடம் மாறி ரயிலை இயக்கியது தெரியவந்தது.
ரயில் வித்யாபதிநகர் ஸ்டேஷன் வெளிப்புற சிக்னலை கண்டு அங்கேயே நிறுத்தப்பட்டது. உடனடியாக, ரயில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பிறகு ரயில் மீண்டும் பச்வாராவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு காலை 6.15 மணிக்கு சமஸ்திபூருக்கு மீண்டும் ரயில் புறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சரியான சிக்னலை வழங்க தவறிய இரண்டு உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களை கடமையில் இருந்து தவறியதாக கூறி பணியிடை நீக்கம் செய்து சோனேபூர் ரயில்வே கோட்டத்தின் மேலாளர் நீலமணி உடனடியாக உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பிரேந்திர குமார் கூறுகையில்,"அமர்நாத் ரயில் வேறு வழித்தடத்தில் சென்றது. அதிகாரிகள் தங்களின் தவறை ஒப்புக்கொண்டனர். ரயில்வே துறை இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
விசாரணை அறிக்கை தயாரான உடன் குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது, இரண்டு உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: அசராமல் 17 கி.மீ.,க்கு மலையேறி அசத்திய 2 வயது குழந்தை